ஆசிரியரின் அவலக் குரல்


மாணாக்கருக்கோர்

ஆசிரியரின் அவலக்குரல்

அன்பு மாணாக்கரே...


என் பிள்ளைகளை

மற்றவர் திட்டக்கூடாது

என்பதற்காக நானே

திட்டித் தீர்த்தேன் உங்களை...


பிள்ளையை திட்டும் உரிமை கூடவா

தாய்க்கு இல்லை?

நானும் உங்களுக்கு தாயல்லவா

உங்களை என் பிள்ளைகளாய்

நினைத்ததனாலோ என்னவோ

இறைவனும்

எனக்கெதற்கு இன்னும்

பிள்ளைகள் என்று

நினைத்தான் போலும்...!


கல்லுக்குள்ளும் ஈரம் உண்டாம்

எனக்குள்ளும் ஈரம் உண்டு

ஆனாலும் என் தொழில்

எனைப் பல வேஷங்கள்

போட வைப்பதுண்டு...

அதை பலரும் புரியவில்லை


தாய் பிள்ளையை

சுமப்பது பத்து மாதம் தானே...!

அதுவும் கருவறையினிலே

ஆசிரியத் தாயோ

தம் மாணாக்கரை

சுமப்பது இதயவறையில்...!

இதயத்தின் சுமை

இறப்பில் அல்லவா இறங்கும்...!


கனவிலும் நனவிலும்

தினம் தினம் என்

மனக் கண்ணிலே நீங்களல்லவா...

என்னை நினைக்க

நீங்கள் மறந்தாலும்

உங்களை நினையாத

நாள் எனக்கில்லையே


ஒரு தாயின் கண்டிப்பு தானே

பிள்ளைகளை செப்பனிடும்

நானோ கண்டிக்காது விட்டால்

பலரும் உம்மை கண்டிப்பரே...!


உளி கொண்டு கல்லை

உரசுவது கல்லுக்கு வேதனையோ...?

இல்லை அது சிற்பத்தின் அடித்தளம்

சொல்லம்பு கொண்டு நான்

உங்களை தாக்குவது 

எதிர்காலம் ஜொலிக்கவல்லவா

அதுவன்றோ நல்லாசானின் பணி...


வாழ்த்துகிறேன் பல கோடி முறை

வாழனும் வையகம் போற்ற

ஜெயிக்கணும் பாரில் நீங்கள்

என்றென்றும்…


(2021 AL மாணவர்களுக்காக)

கவிதை‌ ஆக்கம்: 
M.H.MuneeraBegam
Galle


Comments